Skip to main content

''பொதுமுடக்கத்திற்கு முன்பே இதை ஆரம்பித்துவிட்டேன்'' - கௌதம் வாசுதேவ் மேனன்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

bsh


இந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் வைரலாகி, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளைக் குவித்து வெற்றியடைந்தது. இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் வந்திருக்கிறார். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுயாதீன காதல் இசைப்பாடலான “ஒரு சான்ஸ் குடு” பாடல் வெளியான வேகத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இப்பாடலில் சாந்தனு பாக்கியராஜ், மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளார்கள். இப்பாடலைப் படம்பிடித்தது பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியபோது...
 


"இப்பாடலின் மையம் என்பது காதல், நட்பு, இருவருக்கும் ஏற்படும் தவறான புரிதல் ஆகியவை தான். ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விஷயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப்போக, அவள் அதனை இவனைப் பற்றியதாகத் தவறாகப் புரிந்து கொள்கிறாள். அவன் மிக நகைச்சுவையான வகையில் இதனைக் கையாள்கிறான். இதுவே பாடலின் மையம். இப்பாடலின் முதல் விதை பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் மதன் கார்கி ஆகியோருடன் இதனைப் பற்றி பொதுமுடக்கத்திற்கு முன்பே விவாதித்தேன். இப்பாடலின் முக்கிய அம்சமாக, வெகு அற்புதமான நடிகர்கள் இப்பாடலில் பங்கு பெற்றிருந்தாலும், நம் கவனத்தை ஈர்ப்பது இப்பாடல் படமாக்கப்பட்ட இடமான மொட்டை மாடிதான். அந்த இடங்கள் பாடலுக்குப் பெரும் அழகைக் கூட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டைமாடி என்பது இந்த பொதுமுடக்கக் காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. 

அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில் பணியாற்றினர். இது மிகச்சாதாரணமான ஒரு நண்பர்களின் கூடலாக, திரை மீதான காதலுடன் விரும்பி உருவாக்கும் நிகழ்வாக நிகழ்ந்தது. நடிகர்கள் அனைவரும் மேக்கப்பே இல்லாமல் தாங்களே செய்து கொண்ட இயல்பான ஒப்பனையுடன் நடித்தார்கள். அவர்களின் சொந்த உடையில் இருந்து படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் உடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன் தேர்ந்தடுத்த உடையுடனே நடித்தார்கள். தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பில் அனைவரும் முகக்கவசத்துடன், சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து மிகவும் சுத்தமான முறையில் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படம்பிடித்தோம். நடிகர்கள் மட்டுமே கேமராவை பார்த்து நடிக்கும் போது மட்டும் முகக்கவசம் இன்றி நடித்தார்கள். பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தில் பணியாற்றி வரும் பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உத்ரா மேனன் உடைவடிவமைப்பு செய்ய, சதீஷ் நடன இயக்கம் செய்துள்ளார்.



 

சார்ந்த செய்திகள்