தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார்.
அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார்.
மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.