நம் மனதில் நீங்காத இடம் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமனியத்தின் நெடுநாள் நண்பரான கங்கை அமரன், தனது ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ நூலில் பகிர்ந்த எஸ்.பி.பி குறித்த நினைவுகளில் ஒரு பகுதி...
”பாரதிராஜாண்ணனுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் ஜாலியான, கலாட்டாவான க்ளோஸ் நட்பு உண்டுங்கிறத நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். "சினிமாவுல நடிக்க, ட்ரை பண்றதவிட வேற லைனுக்கு ட்ரை பண்ணுடா பாரதி'னு பாஸ்கரண்ணன் சொன்னார். பாரதியும் சம்மதிச்சார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்த ராஜாண்ணனும், பாஸ்கரண்ணனும், "பாரதிய அஸிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்துவிடுங்க'னு ஜி.கே.வி.கிட்ட சொல்ல... அவர் பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல் கிட்ட சொல்ல...
"இருளும்ஒளியும்'னு அர்த்தம் வர்ற புட்டண்ணாவோட கன்னடப் படத்துல பாரதிராஜாண்ணன் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆனார். இது பற்றி நான் விரிவா ஏற்கனவே சொல்லீருக்கேன். இந்தப் படத்தில் எஸ்.பி.பி. பாடப் போனபோதுதான், எஸ்.பி.பிக்கும், பாரதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதையும் சொல்லீருக்கேன். அந்த நட்பு மூலம் எஸ்.பி.பி.யோட கச்சேரிகள்ல "பாவலர் பிரதர்ஸ்'ங்கிற பேர்ல நாங்க இசையமைச்ச அனுபவங்களையும்... அதன் மூலம்... பாரதிராஜா, இளையராஜா, பாஸ்கர்... பால சுப்பிரமணியம், நான்... ஆகியோர் "நட்பில் ஐவரானோம்'ங்கிறதையும் ஏற்கனவே சொல்லியிருக்கேன். இந்தச் சமயம்.... தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு எஸ்.பி.பி., பெரிய பந்தாவுமில்லாம எங்க மியூஸிக் குரூப்ல வந்து கலந்துக்குவான். இப்பவெல்லாம் ரெண்டு பாட்டு பாடினாலே பெரிய ஆளுனு நினைச்சுக்கிறாங்க. பாலு அப்படி இல்ல. அதனாலதான் இவ்ளோ ஒசரத்துக்கு அவன் வளர்ந்து நிக்குறான். தி.நகர். வாணி மஹால்ல பாரதியண்ணன் ஹீரோவா நடிக்கிற நாடகம் ஏற்பாடாகியிருக்கு. நாடகத்துக்கு மொதஆளா வந்து உட்கார்ந்திட்டான் பாலு. "என்னடா...பாலு இம்புட்டு அக்கறயா வந்து ஒக்காந்து நாடகம் பாக்குறான்?'’னு விசாரிச்சா... விபரம் தெரிய வருது. நாடகத்துல ஹீரோ பாரதி போட்டு நடிக்கிற ட்ரெஸ்ல ஒரு சர்ட்டும், ஜிப்பாவும் பாலுவோடது. நாடகம் முடிஞ்சதும் அதை வாங்கிட்டுப் போறதுக்காக வந்து உட்கார்ந்திருக்கான்னு தெரிஞ்சது. நாடகத்தோட க்ளைமாக்ஸ் நடந்துக்கிட்டிருக்கு. மேடையில பாலுவோட ஜிப்பாவ போட்டுக்கிட்டு பாரதியண்ணன் உணர்ச்சிகரமா பேசிக்கிட்டிருக்கார். ஜிப்பாவ வாங்கிட்டுப் போக பாலு கீழ உட்கார்ந்திருக்க.... அங்கதான் ட்விஸ்ட்டு. காட்சிப்படி... உணர்ச்சிகரமா பேசிக்கிட்டு... ரொம்ப எமோஷனலாகி... போட்டிருக்க ஜிப்பாவ பாரதி கிழிக்கணும். பாவம் பாலுவுக்கு இது தெரியாதுல்ல. பாரதி... ஆவேசமா தான் போட்டிருக்க ஜிப்பாவ கிழிக்க.... அதப்பார்த்து தலமேல ரெண்டு கையையும் வச்ச பாலு... "அய்யோ... நேத்துத்தான புதுசா வாங்கினேன் இந்த ஜிப்பாவ. ரொம்ப காஸ்ட்லி.... 200 ரூபாய்க்கு வாங்கித் தொலைச்சேனே... அத கிழிச்சுட்டானே பாவி....'னு பாலு கத்துனான். இப்படியெல்லாம் நட்புக்காக பல இழப்புகள தாங்கீருக்கான் பாலு. சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப பாசக்காரப்பயதான்.”
இன்னும் பல மகிழ்ச்சியான, சுவாரசியமான நினைவுகளை, கிண்டிலில் படித்து மகிழுங்கள்... க்ளிக் செய்யுங்கள்...