'நான் ஈ' மூலம் நமக்கு நன்கு அறிமுகமான நானியைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார், நான் அவரை திரையில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தெலுங்கில் அவரது சமீபத்திய வெளியீடான 'கேங் லீடர்' வெற்றி பெற்றுள்ளது. சென்னையிலும் இரண்டு வாரங்களாக மல்டி - ப்ளக்ஸ்களில் தாக்குப் பிடிக்கிறது என்றால் உண்மையான வெற்றிதான். இடையில் சில சறுக்கல்களுக்குப் பிறகு, 'ஜெர்ஸி', 'கேங் லீடர்' என மீண்டும் வெற்றிப் படிகளில் ஏறுகிறார் 'நேச்சுரல் ஸ்டார்' நானி. 'கேங் லீடர்' என்று டைட்டில், அதுவும் தெலுங்குப் படம்... கண்டிப்பாக காரமான மசாலா ஆக்ஷன் படம் என்று எண்ணி சென்ற எனக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது. கேங் இருந்தது, லீடரும் இருந்தார், ஆக்ஷனும் இருந்தது, மசாலாவும் இருந்தது... ஆனால் இது வழக்கமான தெலுங்கு மசாலா ஆக்ஷன் கதையல்ல. இப்போதெல்லாம் 'தெலுங்கு மசாலா' என்று குறிப்பிடுவதும் வலுவிழந்து வருகிறது. முழுதாக மாறாவிட்டாலும் அவர்களும் புதுப் புது கதைகளில் ஃப்ரெஷாக படமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
'கேங் லீடர்'.... இயக்குனர் விக்ரம் குமாரின் படம். தமிழகத்தை திகில் த்ரில்லர் படங்களின் பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்க வைத்ததில் 'யாவரும் நலம்' மூலம் இவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த வரிசையில் 'யாவரும் நலம்' படத்துக்கு முக்கிய இடமுண்டு. காமெடி, ஆட்டம் பாட்டம் என்று கலக்காத பியூர் த்ரில்லர் படம் அது. அதற்கு முன்பு 'அலை', பின்பு '24' என படங்கள் கொடுத்திருந்தாலும் 'யாவரும் நலம்' இன்றும் இவரது அடையாளமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. தெலுங்கில் இவரது முகம் சற்றே வேறு. நாகர்ஜுனா குடும்பத்தின் மூன்று தலைமுறைகளையும் நடிக்க வைத்து இவர் இயக்கிய 'மனம்' அங்கே பெரிய வெற்றி. அங்கு விக்ரம் ஒரு ஃபீல் குட் இயக்குனர். கேங் லீடரும் நம்மை 'குட்' ஆகத்தான் ஃபீல் பண்ண வைக்கிறது.
கருப்பு நிற உடைகளையும், முகமூடிகளையும் அணிந்துகொண்டு ஆறு பேர் கொண்ட குழு வங்கி ஒன்றை கொள்ளையடிக்கச் செல்கிறது. வங்கியில் 300 கோடி ரூபாய் பணத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் திருடிவிட்டு கீழே வருகிறது. அலாரம் அடித்து போலீஸும் வங்கிக்குப் படையுடன் வருகிறது. அப்போது, அந்த கொள்ளைகுழுவில் ஒருவன், மற்றவர்களை துப்பாக்கியில் சுட்டு கொன்றுவிட்டு வழியில் வந்த பாதுகாவலரையும் சுட்டுவிட்டு வேனை ஓட்டிச் செல்கிறான். திருடன் வேனை மிக வேகமாக ஓட்டிச்செல்கிறான். அவனை விடாமல் துரத்தும் போலீஸால் அவனை பிடிக்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக வேனை ஓட்டிச் சென்று தப்பிக்கிறான். இந்த சம்பவம் நடைபெற்று 14 மாதங்கள் கழித்து, வரலக்ஷ்மி (சரண்யா பொன்வண்ணன்), ப்ரியா(ப்ரியங்கா அருள்மோகன்), ஸ்வாதி (ஷிரியா ரெட்டி), வாய் பேச முடியாத சிறுமி சின்னு (பிரான்யா பி ராவ்) என்று நான்கு வெவ்வேறு வயதுடைய பெண்களுக்குக் கடிதம் ஒன்று வருகிறது. அந்தக் கடிதத்தில், உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது. கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருக்க அந்த முகவரிக்கு நான்கு பெண்களும் வருவார்கள். முகவரியில் குறிப்பிடப்பட்ட வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை தட்டினால், வயதான சரஸ்வதி (லக்ஷ்மி) என்ற பாட்டி கதவை திறப்பார். பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று வந்த நான்கு பெண்களுக்கும் ஷாக். சரஸ்வதி வந்தவர்களை உள்ளே அழைத்து தான் ஏன் அவர்களை அழைத்தேன் என்று கூறுவார். அவர்கள் ஐந்து பேரும் அதற்கு முந்தைய ஆண்டு நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் கூட்டாளியாலேயே கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். அவர்கள் கொல்லப்பட்டதால் ஆதரவின்றி நிற்பவர்கள். 'நாம் எல்லாம் ஒன்று அந்த கொலைகாரனை பழி வாங்க வேண்டு'மென அழைப்பார் லக்ஷ்மி. முதலில் மறுக்கும் அவர்கள், பின்னர் ஒரு கேங்காக ஃபார்ம் ஆகிறார்கள்.
இவர்கள் மட்டும் எப்படி பழிவாங்க முடியும்? அதற்காக தங்கள் கேங் லீடராக, க்ரைம், துப்பறியும் நாவல்கள் எழுதும் 'பென்சில் பார்த்தசாரதி'யை துணைக்கு அழைக்கிறார்கள். தனக்கும் இதனால் ஆதாயம் உண்டு என்று எண்ணி லீடர் பொறுப்பை ஏற்று மிஷனில் இறங்குகிறார் நானி. அதன் பின் நடக்கும் துப்பறிதல், காமெடி கலாட்டா, செண்டிமெண்ட், சண்டை... இதுதான் 'கேங் லீடர்' படம். ஆங்கில படங்களை காப்பியடித்து டைட்டிலை அப்படியே கொஞ்சம் மாற்றி நாவல் எழுதும் 'பென்சில் பார்த்தசாரதி'யாக நானி அறிமுகமாகும் காட்சியே ROFL. கொஞ்சம் மென்மையான, அப்பாவித்தனமான, காமெடியான ஹீரோ தேவைப்படும் இந்தப் பாத்திரத்துக்கு நானி பெர்ஃபெக்ட் ஃபிட். படம் முழுவதும் அசத்துகிறார், அடித்து ஆடுகிறார். அவருக்கு அமைந்த கேங்கில் லக்ஷ்மி, சரண்யா இருவரும் அனுபவ நடிப்பில் அசத்த ப்ரியங்கா, ஷிரியா ரெட்டி, சிறுமி பிரான்யா மூவரும் அழகான நடிப்பில் ஈர்க்கிறார்கள். நாயகி ப்ரியங்காவுக்கென எக்ஸ்ட்ரா முக்கியத்துவம் கொடுத்து தனி ட்ராக் போடாமல் கதையோடு சென்றது படத்தின் ப்ளஸ். வெண்ணிலா கிஷோர், வரும் ஓரிரு காட்சிகளில் நம்மை நன்றாகவே சிரிக்கவைக்கிறார். ஆனால், தன் பால் ஈர்ப்பு, மூன்றாம் பாலினம் குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் சினிமாவும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
வில்லன் கார்த்திகேயா, திடமான உடல், முரட்டு முகமென மிரட்டுகிறார். ஆம்புலன்ஸ் ட்ரைவர் டூ கார் ரேசர், பொருத்தமான கற்பனைதான். நாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசமான, சுவாரசியமான பின்னணியை அமைத்து அதிலிருந்தே நம்மை என்டர்டைன் செய்யத் தொடங்கிவிடுகிறார் விக்ரம் குமார். துப்பறியும் காட்சிகளில் காமெடி மிக சிறப்பாக ஒர்க் - அவுட் ஆகியுள்ளது. இப்படி ஃப்ரெஷாகத் தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான தெலுங்கு சினிமாவாகிறது. இரண்டாம் பாதியில் பென்சில் பார்த்தசாரதிக்கு இந்தப் பெண்களுடன் பாசம் அதிகமாகிறது. கிட்டத்தட்ட இந்த கேங், ஒரு குடும்பம் ஒரு கதம்பம் என்கிற அளவிற்கு பாசம், எமோஷன்ஸ் உண்டாகிறது. நானிக்கு ப்ரியா மீது கண்டவுடன் காதல். தனியாக லவ் ட்ராக் போகாமல் படத்துடன் ஒன்றியே லவ் ட்ராக் போவது நன்மை. ஆனால் முடிவில் அந்த வங்கித் திருடர்களுக்கு ஒரே செண்டிமெண்ட் பின்னணி வைத்ததெல்லாம் அதன் உச்சகட்டம். படம் எப்படி துவங்கினாலும் ஒரு சண்டைக்காட்சியுடன்தான் முடியவேண்டும் என்பதில் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்கள் போல. அதுவரை தந்திரமாக, பல நல்ல ஐடியாக்கள் பண்ணி செயல்பட்டு வந்த ஹீரோ இறுதியில் நேரடியாக வில்லன் இருக்கும் இடத்திற்கு போய் அடித்து நொறுக்குகிறார்.
தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரிடமிருந்து 'எஸ்'ஸாகி 'மிஸ்'ஸான அனிருத் அங்கு நானியுடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். 'ஜெர்ஸி', 'கேங் லீடர்' என அடுத்தடுத்து இணைந்திருக்கிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். ஏற்கனவே நாம் பார்த்த மாதிரியான காட்சிகள் வந்தபோதும் படத்தின் பின்னணி இசைதான் படத்துடன் நம்மை ஒன்றவைக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள் கதையுடன் சேர்ந்தே வருகின்றன. படத்திற்கு பாடல் தேவையாக இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் யோசிக்கவிடாமல் செய்திருப்பது அனிருத்தின் இசையும் மிரோஸ்லா குபா ப்ரோஜெக்கின் ஒளிப்பதிவும். இவர் போலந்து நாட்டை சேர்ந்தவர். தெலுங்கு சினிமாவில் தற்போது வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களின் ராஜ்ஜியம் தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். மிர்ஸ்லோவ் பயன்படுத்திருக்கும் நிறங்களும், பிரேம்களும் படத்தின் தரத்தை கொஞ்சம் உயர்த்தியே பிடிக்கிறது. விக்ரம் குமார் படத்தில் ஒளிப்பதிவிற்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதே முக்கியத்துவம் இந்தப் படத்திலும் இருக்கிறது. அவருடைய அசால்ட்டான வழக்கமான திரைக்கதை மட்டும் இன்னும் கவனமுடன் கையாளப்பட்டிருந்தால் படம் தற்போது தொட்டிருக்கும் உச்சத்தை தாண்டி தொட்டிருக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் இரண்டாம் பாதியை நறுக்கென்று கட் செய்திருக்கலாம். பின் குறிப்பு: படத்தை நல்ல டிராமாவாகப் பார்த்தால் இந்தப் படம் உங்களை மிகவும் கவரும். லாஜிக்கை தேடித் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக இருந்தால் நிறைய இருக்கிறது கண்டுபிடிப்பதற்கு.
மொத்தத்தில் கேங் லீடர் படத்தை குடும்பத்துடன் கேங்காக சென்று பார்த்து ரசித்து, சிரித்து, கொஞ்சம் எமோஷன்ஸை தாக்குப்பிடித்துவிட்டு எஞ்சாய் செய்யலாம்.
அடுத்த படம்: அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்தில்? பக்கத்து தியேட்டர் #2 ஜோக்கர்