பிரபல கர்நாடக இசைப் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் அருணா சாய்ராம். இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் பல நாடுகளில் பல மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளார். அமெரிக்க காங்கிரஸின் 'உயர் சிறப்பு விருது', மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான ‘செவாலியர் விருதுக்கு’ அருணா சாய்ராம் தேர்வாகியுள்ளார். இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு அருணா சாய்ராமின் ஏராளமான பங்களிப்புகளுக்கு அந்நாட்டு பாராட்டு அடையாளமாக வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தேர்வானது தொடர்பாக அருணா சாய்ராம் கூறுகையில், "ஒரு இசைக் கலைஞராகவும், நமது நாட்டின் கலாச்சார வாரிசாகவும் எனது கடமையைச் செய்ததற்காக இதுபோன்ற ஒரு உயரிய விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதற்கு முன்னதாக தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டு கலைத்துறை பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. பின்பு 2016ஆம் ஆண்டு சிறந்த நடிப்பாற்றலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.