உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறை சார்ந்த அணைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டு திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அதேபோல் நாட்புறக் கலைஞர்களும் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை மன்றம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுமாறு தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்...
''அனுப்புநர் -
டி ஐயப்பன்,
மாவட்ட செயலாளர்,
தமிழக நாட்டுப்புற இசைக்கலை மன்றம்,
மதுரை.
ஐயா,
மதிப்பிற்குரிய உதவும் மனப்பான்மை உடைய அத்தனை தொண்டு நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், மக்களின் நிலையை அறிந்து பூர்த்தி செய்யும் அனைத்து பெரியோர்களுக்கும் வணக்கம்.
நாங்கள் கிராமிய கலையான கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் மற்றும் குருவி நாட்டிய இசைக் கலைஞர்கள் எங்களது தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெரும் மன்றத்தில் பயணித்து வருகின்றோம். தற்போது கரோனா என்னும் கொடிய நோயால் 144 தடை உத்தரவின் படி கலைசார்ந்த திருவிழாக் காலங்களில் எங்களது தொழில் முடக்கப்பட்டு உள்ளது. 2020ல் எந்த ஊரு திருவிழா நிகழ்ச்சிகளும் நடத்துவது குறித்து அரசு தடை உத்தரவு இருப்பதால் தலா 800 குடும்பங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் எங்களுக்கு ஏதேனும் பொருள் உதவியோ அல்லது அன்றாட தேவைக்கு அத்தியாய உணவு வழங்கி எங்களின் வறுமை நிலையை போக்குவதற்கு உதவிகள் வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
கிராமிய கலைஞர்
டி ஐயப்பன்
மதுரை மாவட்ட செயலாளர் தமிழக நாட்டுப்புற இசைக்கலை மன்றம்'' என குறிப்பிட்டுள்ளனர்.