தமிழில் 'என்னை அறிந்தால்', 'உத்தம வில்லன்', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். கடைசியாக விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி, செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த நபர் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்த நபர் பார்வதி நாயர் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அவர் வேலை செய்யும் போது தன்னை துன்புறுத்தியதாகவும், தான் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்வதி நாயர், உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 7 பேர் தன்னை தாக்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட பார்வதி நாயர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி பார்வதி நாயர் மற்றும் அவரது உதவியாளர்கள் கொடப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.