Skip to main content

"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்" - ஃபெப்சி அறிவிப்பு!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

vasv


தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம், திருப்போரூர் அடுத்த பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கான 1,000 குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து இந்நிகழ்ச்சி குறித்து ஃபெப்சி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்...
 


"இன்று காலை பையனூரில்‌ உள்ள தமிழக அரசு வழங்கிய இடத்தில்‌ தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளன உறுப்பினர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கிய நிலத்தில்‌ 1,000 குடியிருப்புகள்‌ கட்ட தமிழக முதல்வர்‌ எடப்பாடி பழனிசாமி‌ அடிக்கல்‌ நாட்டி தொடங்கி வைத்தார்‌. கரோனா பொது முடக்கம் முன்பு ஏறக்குறைய மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்பே பிப்ரவரி மாதம்‌ இந்தக் குடியிருப்பைத் தொடங்கி வைக்க வேண்டும்‌ என்று தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்‌ வைத்திருந்தோம்‌. கரோனா பொது முடக்கத்தால் மூன்று நான்கு மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி இன்று‌ முதல்‌ நிகழ்ச்சியாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர்‌ எடப்பாடி பழனிசாமிக்கும், துறை அமைச்சர்‌ கடம்பூர்‌ ராஜுக்கும், தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ மகிழ்ச்சி கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ அம்மா படப்பிடிப்பு நிலையம்‌ கட்டுவதற்காக இரண்டாம்‌ தவணை நிதியாக ரூபாய்‌ 50 லட்சம்‌ காசோலையாக தமிழக முதல்வர்‌ வழங்கினார்‌. தினசரி வேலை செய்து தினசரி ஊதியம் பெறுகின்ற தினக்கூலிப் பிரிவில்‌ இருக்கின்ற பொருளாதாரத்தில்‌ நலிந்த ஏறக்குறைய 5,000 தொழிலாளர்களுக்கு முன்பணம்‌ கட்டுவதோ, கிடைக்கின்ற குறைந்த சம்பளத்தில்‌ மாதத் தவணை கட்டுவதோ இயலாத காரியம்‌ ஆகும்‌. எங்களுடைய சிரமத்தை 26.8.2018 அன்று நடைபெற்ற எம்‌.ஜி.ஆர்.‌ நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்‌ திறப்பு விழாவில்‌ முதல்வரிடம் நேரடியாகத் தெரிவித்தபோது, துணை முதல்வரிடம்‌ இது சம்பந்தமாகப் பேசி தொழிலாளர்களுக்கு உதவும்படி ஆலோசனை வழங்கினார்‌. அதன்படி நாங்கள்‌ இரண்டு முறை துணை முதல்வரைச் சந்தித்துப் பேசினோம்‌.
 


துணை முதல்வரும் செய்தி ஒளிப்பரப்புத்துறை அமைச்சரும்‌ அதிகாரிகளுடன்‌ விவாதித்து தற்போது பையனுரில்‌ அரசு வழங்கியுள்ள இடத்திற்கு அருகாமையில்‌ உள்ள அரசு நிலத்தில்‌ குறைந்த வருவாய்‌ உள்ள தொழிலாளர்களுக்கு 2,000 வீடுகள்‌ இலவசமாக கட்டித் தர வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தனர்‌. இன்று காலை அடிக்கல்‌ நாட்டு விழாவிற்கு முன்பு முதல்வரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை பற்றி விவாதித்த போது நாளை மறுநாள்‌ துணை முதல்வரைச் சந்தித்து இதற்கான விஷயங்களை விவாதிக்குமாறு செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர்‌ கடம்பூர்‌ ராஜூவிடம் தெரிவிக்க, எங்கள்‌ வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ தற்போது சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சின்னத்திரை தயாரிப்பாளர்களுடன்‌ கலந்து ஆலோசித்தபோது படப்பிடிப்புகள்‌ எவ்வாறு தொடங்குவது, எவ்விதமான பாதுகாப்புடன்‌ தொடங்குவது என்பதைப் பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்தையும்‌ விவாதித்த பின்னர்‌ மேலும்‌ சின்னத்திரை தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌, பெப்சியும்‌ உறுப்பினர் - உறுப்பினர்‌ என்ற அடிப்படையில்‌ பணிபுரிவது என்று ஒப்புக்‌ கொள்ளப்பட்டது. அதாவது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்‌ அனைத்து படப்பிடிப்புகளும்‌ சின்னத்திரை தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ (Steps) பரிந்துரைக் கடிதம்‌ வழங்கிய பின்னர்‌ அந்தத் தயாரிப்பாளர்களுக்கு சம்மேளனம்‌ தொழில்‌ ஒத்துழைப்பு வழங்குவது எனவும்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டது.
 

http://onelink.to/nknapp


மேலும்‌ அரசின்‌ அனுமதியைப் பெற வேண்டும்‌ என்பதற்காக அரசு அளித்த விண்ணப்பங்களில்‌ கோரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும்‌ தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ கோரிக்கையாக தற்போது கரோனா வைரஸால்‌ தொழிலாளர்கள்‌ மத்தியில்‌ ஒரு பயம்‌ உள்ளதால் கோவிட்-19 காப்பீடு பெற்றுத் தரும்படி ஒரு வேண்டுகோள்‌ வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களின்‌ வேண்டுகோளையும்‌ ஏற்ற சேனல்கள்‌ கோவிட்-19 காப்பீடு செய்து தருவதாகத் தெரிவித்த தொலைக்காட்சி நிறுவனங்கள்‌ ஒப்புக்‌ கொண்டுள்ள எங்கள்‌ கோரிக்கையை ஏற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எங்கள்‌ அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்