சென்னை பூந்தமல்லியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக இண்டஸ்டிரியல் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா, புரொடக்ஷன் அசிஸ்டண்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூன்று பலியாகினர். மேலும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரேன் ஆப்பரேட்டர் மீது மூன்று வழக்கு பதியப்பட்டு, போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் கமலுக்கும், ஷங்கருக்கும் நசரத்துப்பேட்டை காவல் நிலையம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இந்த விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மிகப்பெரிய விபத்தாக முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு தள விபத்து கடவுள் புண்ணியத்தால் சிறிய விபத்தாக முடிந்துள்ளது. காயம்பட்டவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். பெப்சி கட்டடம் உருவாக இறந்த உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஆர்.சந்திரன் முக்கியக் காரணமாக இருந்தார்.
90 சதவீத விபத்துக்கள் பெரிய பட்ஜெட் படங்களில்தான் நடைபெறுகிறது. தமிழ்த் திரைத்துறை அடுத்தகட்டத்திற்கு தயாராகி வருகிறது . ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது, அதேபோல ஆங்கிலப் படங்களுக்கு இணையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.