லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பிகில் படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி, சிவமோகா, நெய்வேலி எனப் பல இடங்களில் நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான்,அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அண்மையில்தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரியளவில் ரசிகர்களை அழைத்து இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று விஜய் மேடையில் தெரிவித்திருந்தார்.
இதன்பின் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார் பிரதமர் மோடி.இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.மாஸ்டர் படம் முதலில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது ஆனால் தற்போதைய சூழ்நிலையால் படம் எப்போது ரிலீஸாகும் என்று தெரியவில்லை.
கரோனாவால் இன்று படம் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ட்விட்டரில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி என ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் எழுத்தாளராகப் பணிபுரிந்துள்ள இயக்குனர் ரத்னக்குமார்,“கரோனா வைரஸ் பிரச்சனை இல்லையென்றால், மாஸ்டர் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்கும்,பல சோகமான ட்வீட்டுகளைப் பார்க்க முடிகிறது.ஒரு ரசிகனாக இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.ஆனாலும், உயிர் பிழைத்திருப்பதே இப்போது முக்கியம், கொண்டாட்டம் எல்லாம் அதற்கு பின்னர்தான்'' என்று பதிவிட்டுள்ளார்.