லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது.
பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். பேனர்கள், போஸ்டர்கள் என வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நெல்லை மாநகரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் லியோ பட முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் கொண்டாட்டத்திற்கு அம்மாநகரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநகர காவல்துறையினர் கூறுகையில், "பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதிக சத்தம் எழுப்பும் டிஜே இசை, ஆட்டம் பாட்டங்களுக்கு திரையரங்க வளாகத்திற்குள்ளும் வெளியேவும் நடத்த அனுமதி கிடையாது. தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே புதுச்சேரியில் காலை 7 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இப்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.