Skip to main content

போலி டிக்கெட் விவகாரம் - காவல் நிலையத்தை நாடிய திரையரங்கம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Fake ticket issue - theaters complaint to police station

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்கவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து லியோ படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 7 மணிக்கே திரையிடச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. 

 

இந்த நிலையில், லியோ பட முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் போலியாக விற்கப்பட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த ஒரு திரையரங்கம் செல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் தங்கள் திரையரங்கில் 19 ஆம் தேதி காலை 9 மணி காட்சியே திரையிடப்படாத நிலையில், அக்காட்சிக்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்