விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.
அந்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், நடிகர் ஃபகத் ஃபாசில் 'தளபதி 67' குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மலையாளத்தில் 'தங்கம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களைச் சந்தித்த ஃபகத் ஃபாசிலிடம், "தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா" எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் வகையில் படம் இருந்தால் என் கதாபாத்திரம் இருக்கும். அகில் நான் நடிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
மேலும் அவரிடம், "விக்ரம் படத்தில் உங்களின் அமர் கதாபாத்திரத்தைக் கொண்டு தனி படம் எடுக்கப்படுமா" என்ற கேள்விக்கு, "அது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி உருவாகினால் படக்குழு முறைப்படி அறிவிப்பார்கள்" எனப் பதிலளித்துள்ளார். ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், ஃபகத் ஃபாசில் இப்படி கூறியிருப்பது ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் வகையில், இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் பாணியில் இருக்குமா, எந்த ஜானரில் இருக்கும், யார் யார் நடிக்கிறார்கள் என்பன குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.