95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதில் விருது பெற்றவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய கதை இது. இதை குனீத் மோங்கா என்பவர் தயாரிக்க கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் வாங்கிய பிறகு படத்தை பலரும் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொம்மன், பெள்ளி தம்பதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளனர். முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுப் பத்திரமும் இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பழங்குடியினத் தம்பதி, "இயக்குநர் சொன்னதை நாங்க செய்தோம். இந்த அளவுக்கு படம் போகும் என நினைச்சுப் பார்க்கல. முதல்வரிடம் வாழ்த்து பெற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதிகாரிகள் தற்போது யானைகளுக்கு உதவ முன்வந்திருக்காங்க. இப்போது யாருக்கும் யானை குட்டிகளைப் பார்க்க அனுமதிப்பதில்லை. தூரத்தில் இருந்து நின்று பார்த்துக் கொள்ளலாம். படக்குழுவினரிடம் இருந்து எந்தப் பணமும் வாங்கவில்லை. இது போன்ற செயல்களுக்கு யாரிடமும் பணம் வாங்குவதில்லை.
யானை குட்டிகளை வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. கஷ்டப்பட்டு தான் வளர்க்கிறோம். நம்ம குழந்தைகளை எப்படி வளர்க்கிறோமோ அப்படித் தான் யானையையும் பார்க்கிறோம். 2016ல் இருந்து தான் யானை குட்டிகளை வளர்த்து வருகிறோம். யானை வளர்ந்து பெரிதாக ஆனதுடன் வேறு ஒருவருக்கு கொடுத்துடுவோம். யானைகளைப் பிரியும் போது வருத்தமாகத்தான் இருக்கும். கொடுப்பவர்களிடம் நன்றாகப் பார்த்துக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்வோம்" என்றனர்.