கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் விருது வாங்கிய நிலையில், அதன் மூலம் உலகளவில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.
இந்நிலையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் மீது பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த தம்பதி சார்பில், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், படத்தின் வருமானப்படி முறையான வீடு, வாகனம் மற்றும் போதிய நிதியுதவி ஆகியவற்றை அவர்கள் நேரம் செலவிட்டு நடித்ததற்காக தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை உண்மையான ஹீரோக்கள் எனக் கூறி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் பார்க்க வைத்து விளம்பரப்படுத்திவிட்டனர். ஆனால் படக்குழு, தமிழக முதல்வரின் பரிசுத் தொகையையும் பிரதமர் மோடியின் பரிசுத் தொகையையும் வாங்கிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பரபரப்பைக் கிளப்ப, தற்போது படக்குழு தயாரிப்பு சார்பில் தம்பதியின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்படத்தின் நோக்கம் யானைப் பாதுகாப்பு, வனத்துறையின் முயற்சிகள் மற்றும் அதற்கு பணியாற்றுகின்ற பொம்மன் மற்றும் பெல்லி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாகும். இப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் யானை வளர்ப்பவர்களை பற்றிய உண்மையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் 91 யானைகள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் கட்டவும், யானைகள் முகாமை மேம்படுத்தவும் நன்கொடை அளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைவர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அகாடமி விருது என்பது பொம்மன் மற்றும் பெள்ளி போன்ற பணியாளர்களுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொண்டு வந்த தேசிய பெருமையின் தருணமாகும்.
படம் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவர் மீதும் எங்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது. மேலும் நல்ல மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.