தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 23 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
ராதாரவி காலில் அடிப்பட்டுள்ளதால், தனது கைத்தடியுடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவியாக வந்திருந்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ராதாரவி 662 வாக்குகள் பெற்று தனது எதிராக போட்டியிட்ட ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரை விட 313 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
இதனிடையே 2024-2026-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16ஆம் தேதி நடந்தது. மொத்தம் 27 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பேரரசு, பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவராக அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணைச் செயலாளராக சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வட பழனியில் உள்ள சங்கத்தில் நேற்று பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.