மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. இப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவர் மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து ‘தேன் கிழக்கு...’, ‘பாதவத்தி...’, ‘ஒரு ஊருல ராஜா...’ ‘ஒத்த சட்டி சோறு...’ ஆகிய நான்கு பாடல்கள் வெளியாகி பார்வையாளர்களிடம் கவனம் பெற்றது. மேலும் இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகி யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் பிரமாண்டமாக இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், ராம், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல இயக்குநர்களும் த்ருவ் விக்ரம், அனுபமா பரமேசுவரன், உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர். மேலும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் காணொளி வாயிலாக படத்தை பாராட்டி பேசினர்.
அந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மற்றும் மாரி செல்வராஜின் மனைவியுமான திவ்யா பேசுகையில், “எல்லோரும் இந்த படத்தில் அவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பற்றி பேசியிருப்பார்கள். எனக்கு இந்த படத்தில் கூடுதல் நெருக்கம் இருக்கிறது. நானும் மாரியும் காதலித்த 16 வருடங்களில் அவர் என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்ட வலி நிறைந்த வாழ்க்கைதான் இந்த ‘வாழை’ படம். இந்த படத்தை நான் பார்க்கும்போதெல்லாம், நான் மிஸ் பண்ண மாரியின் குழந்தை பருவத்தை நான் பார்பதற்காக பண்ணினதுபோல இருக்கிறது. மாரி சின்ன வயதில் இப்படிதான் இருந்திருப்பார் என எனக்காக தனிப்பட்ட முறையில் மீண்டும் ரீ க்ரியேட் செய்து, ஒரு காதலன் ஒரு காதலிக்கு அவனுடைய வலியையும், வாழ்வியலையும் பரிசாக கொடுத்துள்ளதாக நான் இந்த படத்தைப் பார்க்கிறேன்” என்றார்.