கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல தொழில்துறைகள் முடங்கியுள்ளது. குறிப்பாக சினிமாத்துறை கடந்த மூன்று மாதங்களாகவே முடங்கியுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் படங்களின் வெளியீடு, போஸ்ட் புரொடக்ஷன் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி மற்றும் மார்வல் திரைப்படங்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் எப்போது டிஸ்னி படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது பற்றி பேசியுள்ள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாப் சபெக், "ஆரம்பிக்கும் போது முகக் கவசம் கொடுத்துப் பொறுப்பாக ஆரம்பிப்போம். ஆனால் இப்போதைக்கு ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை. பிரம்மாண்ட திரைப்படங்களைப் பொருத்த வரை எங்கள் தீம் பார்க்குகளில் பின்பற்று வழிமுறைகளையே பின்பற்றுவோம்.
தயாரிப்பு வேலைகளில் ஈடுபடவுள்ள எங்கள் பணியாளர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். பொது சுகாதார அதிகாரிகள் சொல்லும் வரை, கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தும் வரை படப்பிடிப்பு தொடங்காது.
பிரம்மாண்டமான படங்களைத் திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தின் மதிப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். 2019 ஆம் ஆண்டு எங்களின் 7 படங்கள் 1 பில்லியன் டாலர் வசூலைக் கடந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ரசிகர்கள் படம் பார்க்கும் முறை மாறி, வளர்ந்து வருவதாலோ அல்லது கோவிட் நெருக்கடி போன்ற சூழல்களாலோ, எங்கள் ஒட்டுமொத்த திட்டத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நிலையை ஆராய்வோம்" என்று கூறியுள்ளார்.