பிரபல இயக்குநரும் , நடிகருமான அமீர் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் கரு.பழனியப்பன், அசார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், கரு பழனியப்பன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "இந்த படத்தின் கதையை தங்கம் என் கிட்ட 'வடசென்னை' படத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைக்கு போய்ட்டோம். அப்போதான் வழக்கமா பண்ணிட்டு இருக்குற படங்களில் இருந்து கொஞ்சம் வேற மாதிரி படம் பண்ணலாம்னு யோசிக்கும் போது, இந்த கதை ஞாபகம் வந்துச்சு. அப்போதான் அவர்கிட்ட இந்த கதையை நான் எடுத்து பண்ணட்டுமா என கேட்டேன், அவரும் ஓகே சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் தான் ஊரடங்கு நேரத்துல இந்த படத்திற்கான முழு ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சேன். இதனிடையே இப்படம் குறித்து அமீருடன் அதிகம் விவாதித்திருக்கிறேன். எப்பவும் ஸ்க்ரிப்ட் எழுதவே மாட்டேன், அது எழுதிய நேரமோ என்னமோ அந்த படம் பண்ண முடியாம 'விடுதலை' படம் பண்ண போய்ட்டோம். அப்போதான் ஒரு நாள் இயக்குநர் அமீர் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தை நான் பண்ணட்டுமா என கேட்டார். கண்டிப்பா பண்ணுங்க, நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு தோணுதுன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நான் சொன்ன சில ஐடியாவை வைத்து அமீர் இறைவன் 'மிகப் பெரியவன்' திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கையில் இருந்து சில விஷயங்களை வைத்து சொல்லிருந்தார். அதை பார்த்துட்டு, இது என்னால் கண்டிப்பா யோசிக்க முடியாது, நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும் இந்த மாதிரி என்னால பண்ண முடியாதுன்னு சொன்னேன். இந்த படத்தை அமீர் பண்ணுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் தலைப்பு ஃபாண்ட் ஸ்டைல் கூட நான் பண்ணது கிடையாது, அவர் பண்ணதுதான். இதை பார்க்கும் போது அவர் எவ்வளவு கவனமாக இந்த கதையை கையாள வேண்டும் என்ற பொறுப்போடு செயல்படுகிறார் என்பது தெரிகிறது" எனத் தெரிவித்தார்.