தமிழ் சினிமா வரலாற்றில் ஆண்டாண்டுகளாகப் பேசப்படாமல் அல்லது சரியான கோணத்தில், சரியான தீவிரத்தில் பேசப்படாத பல விஷயங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானதாக சாதி ஏற்றத்தாழ்வு, அது சார்ந்த வன்முறைகள், கொலைகள் ஆகியவை உள்ளன.

சாதி ஏற்றத்தாழ்வு குறித்து பல படங்கள் முன்னரே வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் கிராமங்கள் சார்ந்ததாக, முக்கியமாக தென் தமிழக கிராமங்கள் சார்ந்த கதைகளாகவே இருந்தன. அதே போல, வாழ்வியலை, கலாச்சாரத்தை சொல்லும் படங்களும் பெரும்பாலும் குறிப்பிட்ட சில பகுதிகளின் வாழ்வியலை, கலாசாரத்தை சொல்வதாகவே இருந்து வந்துள்ளன. இதற்கெல்லாம் விதிவிலக்காக வெகு சில படங்களே சென்னை வாழ்வியலை ஓரளவு உண்மைக்கு நெருக்கமாகக் காண்பித்தன. இப்படி இருந்த சூழலில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'அட்டகத்தி' ஒரு புதிய அலையாக எழுந்தது. சென்னை புறநகர் பகுதிகளின் வாழ்வியலை, அந்தப் பகுதியின் பேச்சு வழக்கை, மாணவர்களின் மனநிலையை, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகளை முதன்முறையாக உண்மைக்கு மிக அருகில் படமாக்கி கவனமீர்த்தார் ரஞ்சித். சமீபத்தில் மிக பிரபலமாகப் பேசப்பட்ட 'ரூட்டுத்தல' கலாச்சாரம் 'அட்டகத்தி'யில் இடம்பெற்றது. வெகுஜன சினிமா ரசிகர்களால் காதல், காமெடி படமாகப் பார்க்கப்பட்ட அப்படத்திலேயே பல சின்னச் சின்ன அரசியல் சார்ந்த குறியீடுகளையும் வைத்திருந்தார் ரஞ்சித். அடுத்து அவர் பேசப்போகும், ஏற்படுத்தப்போகும் அதிர்வலைக்கு அறிகுறியாக இருந்த அவை அப்போது பெரிதாக கவனிக்கப்படவில்லை.

'அட்டகத்தி', வெற்றி பெற, கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார் ரஞ்சித். ஆரம்பத்தில், அந்தக் கதை 'அறம்' கோபியுடைய கதை என்று சர்ச்சைகள் கிளம்பினாலும் பின்னர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. 'மெட்ராஸ்', முதல் முறையாக வடசென்னையை, அதன் அரசியலை, நட்பை, கோபத்தை, துரோகத்தை, காதலை, வாழ்க்கையை தமிழகத்துக்குக் காட்டியது. மொழி, களம் என வடசென்னை முழுமையாக வெளிப்பட்டது அந்தப் படத்தில் என்று சொல்லுமளவுக்கு இருந்த 'மெட்ராஸ்', பெரிய வெற்றியையும் பெற்றது. அந்தப் படத்தில் பா.ரஞ்சித் பேசிய அரசியலும் அதன் பிறகான மேடைகளில் அவர் பேசிய அரசியலும் அவர் மீதான கவனத்தை அதிகப்படுத்தின. திரைப்படத்தை அவர் கலையாகவோ வணிகமாகவோ மட்டும் பார்க்கவில்லை, அதை தாண்டிய பெரிய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவந்தது. 'மெட்ராஸ்' படத்தின் பெரிய வெற்றி ரஞ்சித்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்தைத் தேடி வந்தது. இப்படி 'மெட்ராஸ்' படத்தில் வடசென்னை வாழ்க்கையை மிக இயல்பாகக் காட்டி, கிட்டத்தட்ட அம்மக்களின் திரை பிரதிநிதியாக பார்க்கப்பட்டார் ரஞ்சித். அதன் பிறகு ரஜினியை இயக்கிய 'கபாலி' படத்தின் களம் மலேசியாவாக இருந்தாலும் கரு ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து உதிக்கும் ஒரு தலைவன் குறித்ததாக இருந்தது. தன் அனைத்து படங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசும், அவர்களின் கோபத்தைக் காட்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ரஞ்சித். அது ரஜினி படமாகவே இருந்தாலும் தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல் இருந்தார். 'கபாலி', ரஜினி ரசிகர்களில் ஒரு சாராரை திருப்திப்படுத்தாமல் விட்டாலும் வெற்றியை பெற்றது.

இப்படி உயர்ந்த ரஞ்சித்தின் கிராஃபில் அடுத்த படம் என்ன என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் மீண்டும் ரஜினியை இயக்குகிறார் என்ற செய்தி மிகப்பெரிய ஆச்சரியத்தையும் சிலருக்கு ஆனந்தத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது. 'காலா' என்று வந்த ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்தே அந்தப் படம் பல விவாதங்களை கிளப்பியது. இந்துத்துவம், க்ளீன் இந்தியா போன்றவற்றுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இருந்தன. நில உரிமை என்பது படத்தின் மைய பிரச்சனையாக இருந்தது. 'நிலம் எங்கள் உரிமை' என்ற முழக்கத்தை எழுப்பியது 'காலா'. தங்கள் நிலத்தை மக்கள் போராடித் தக்கவைக்கும் அந்தப் படத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஹீரோவாக அல்லாமல், ஒரு முக்கிய கருவியாகவே இருந்தார். அந்தப் படமும் ரஜினி ரசிகர்கள் ஒரு சாராருக்கு திருப்தி தராத படமாக இருந்தாலும் ரஞ்சித் பேசிய அரசியல் தெளிவாகவும் சத்தமாகவுமே இருந்தது எனலாம். ரஞ்சித், நிஜ வாழ்க்கையிலும் அபகரிக்கப்பட்ட, சட்டவிரோதமாக வாங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டுமென குரல் கொடுத்து செயல்பட்டு வருகிறார். கலையை ஒரு ஆயுதமாகக் கருதும் ரஞ்சித், 'நீலம்' பண்பாட்டு மையத்தைத் தொடங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்த, குரல் எழுப்ப ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். தன் இயக்கத்தில் சென்னை, அதன் வாழ்வியல், ஏற்றத்தாழ்வுகள், எதிர்க்குரல் ஆகியவற்றை பதிவு செய்த ரஞ்சித், தனது தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்' மூலம் நெல்லை வாழ்வியல், சாதி ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்து ஒரு விவாதத்தை உருவாக்கினார். அடுத்ததாக இந்தியில் பழங்குடியின போராளி பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கும் முயற்சியில் இருந்த ரஞ்சித், தற்போது ஆர்யாவை வைத்து 'சல்பேட்டா' என்ற படத்தை இயக்குவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

இப்படி வடசென்னை வாழ்வியல், நில உரிமை ஆகியவை குறித்து தீவிரமான படங்களை இயக்கியவர் என்று ரஞ்சித் இருந்த பட்டியலில் 'வடசென்னை' மூலம் இடம் பிடித்தார் வெற்றிமாறன். 'பொல்லாதவன்' படத்திலேயே சென்னை வாழ்க்கை குறித்து ரியாலிட்டியுடன் இயக்கி கவனத்தையும் வெற்றியையும் பெற்ற வெற்றிமாறன், அதற்கடுத்து அப்படியே நேர்மாறாக மதுரையை மையமாகக் கொண்டு 'ஆடுகளம்' படத்தை இயக்கினார். மதுரையையும் மிக நேர்மையாக, இயல்பாகப் படமாக்கியிருந்தார். எந்த நிலப்பரப்பு குறித்து படமெடுத்தாலும் அதை உண்மைக்கு நெருக்கமாக சிறப்பாகப் படமாக்கும் திறனுள்ளவர் என்ற பெயரை பெற்றார் வெற்றி. பின்னர் 'விசாரணை' திரைப்படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தனுஷுடன் இணைந்த படம் 'வடசென்னை'. அந்தப் படம் 'வடசென்னை' வாழ்வியலை மிக உண்மையாகக் காட்டியிருக்கிறது என்று பாராட்டி ஒரு சாரார் படத்தை வெற்றியாக்கினாலும் இன்னொரு பக்கம் அதில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் வடசென்னை மக்களையும் மீனவர்களையும் அவமதிப்பதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பின. அதற்கான விளக்கத்தைக் கொடுத்து வெற்றிமாறன் வருத்தம் தெரிவிக்க, அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. இந்த எதிர்ப்புகள் குறிப்பிட்ட சிலரால் ஒருங்கிணைக்கப்பட்டவை என்றும் சினிமா வட்டாரங்கள் பேசின. எப்படிப் பார்த்தாலும் 'வடசென்னை' ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.
பா.ரஞ்சித் பேசிய வடசென்னை வாழ்வியலை வெற்றிமாறனும் வெற்றிகரமாகப் பேசியிருந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'அசுரன்' திரைப்படம் சாதி ஏற்றத்தாழ்வுகளையும், அதனால் நிகழும் வன்முறைகளையும் நில உரிமை, பஞ்சமி நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் தீவிரமாக அணுகியுள்ளது. இந்தப் பிரச்சனைகளும் தனது படங்களில் மட்டுமல்லாது நிஜத்திலும் ரஞ்சித் குரல் கொடுக்கும் பிரச்சனைகள். வெற்றிமாறன், இந்தப் பிரச்சனைகளையும் அதன் தீவிரத் தன்மையையும் உணர்ந்து சரியாகப் பேசியிருப்பதாக 'அசுரன்' படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். படம் வெற்றிக் கோட்டை நெருங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ’அசுரன்’, பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இப்படி பா.ரஞ்சித் தனது படத்தில் பேசிய பிரச்சனைகள், காட்டிய களம் ஆகியவற்றை வெற்றிமாறன் இயக்கிய படங்களும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் காட்டியிருக்கின்றன. ரஞ்சித்தின் அணுகுமுறை சற்று அதிரடியென்றால் வெற்றியின் அணுகுமுறை பக்குவமாக இருப்பது அவரது படங்களில் பிரச்சனைகளுக்கு சொல்லப்படும் தீர்வுகளிலிருந்து தெரிகிறது. இங்கு சொல்லப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் ஓரிரு படங்கள் வந்தால் தீர்பவை அல்ல. ஆனால், மாஸ் ஊடகமான திரைப்படங்கள் தீர்வை நோக்கிய அடியை எடுத்து வைக்க வாய்ப்பிருக்கிறது. இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பலரும் இந்தப் பிரச்சனைகளை நேர்மையாகப் படமாக்கி தீர்வை நோக்கிய விவாதங்களையும் செயல்பாடுகளையும் தூண்டலாம்.