![Vasanthabalan](http://image.nakkheeran.in/cdn/farfuture/J-gDNdavCzl9_6p8Tqq3zOJs0JbMKUmeVHzrr3kucr8/1630933174/sites/default/files/inline-images/129_7.jpg)
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும்போது பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சட்டத்திருத்தமானது செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவிற்கு இயக்குநர் வசந்தபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வசந்தபாலன், "தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித்தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அங்காடித்தெரு திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானபோது கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் நின்று கொண்டு வேலை செய்வது தொடர்பான விவகாரம் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.