இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினர்.
இந்நிலையில் 'ஜெய் பீம்' படத்தின் கலைஞர்களுக்கும், களப் போராளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடிகர்கள் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் த.செ. ஞானவேல் பேசியதாவது, "இது மிகவும் முக்கியமான மேடை. நிறைய மேடைகளை 'ஜெய் பீம்' படம் எங்களுக்கு தந்திருக்கிறது. இப்பாடம் உருவாவதற்கு மைய புள்ளியாக இருந்த இயக்கத்தின் மூலம் கிடைக்கும் பாராட்டு விழா என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று சிந்தித்து எல்லாம் 'ஜெய் பீம்' படத்தின் கதையை எழுதவில்லை. அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் இடது சாரி இயக்கத்திற்கு அதை விட சிறப்பு என்னவென்றால், நான் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எழுதும் பொழுது அங்கே இடதுசாரி இயக்கம் வந்து நிற்கிறது. அதுதான் 'ஜெய் பீம்' படம். இதை நான் ஒரு கட்சியின் பிரதிநிதியாக இருந்து ஒரு தத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு 'ஜெய் பீம் படத்தை இயக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குரிமை இல்லாத மக்களின் பிரச்சனைகளை கூட தோளில் ஏந்தி போராடிய இயக்கத்தின் பங்களிப்பை 'ஜெய் பீம்' படத்தில் பதிவு செய்வதற்காக ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்படத்தில் நாங்கள் குறியீடுகளை வைத்திருந்தோம். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் மற்றும் தமிழகத்தில் சமூக நீதியை வேரூன்ற வைத்த பெரியார் உள்ளிட்ட மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த கருப்பு நீலம், சிவப்பு இணைந்து இன்றைக்கு செயல்பட்டால் மட்டுமே இந்தியாவை மீட்க முடியும், ஜனநாயக நாடாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு ஒரு வலுவான நம்பிக்கை உண்டு. அதில் ஒரு சின்ன புள்ளியாக ஜெய் பீம் படத்தை எடுத்துக்கொண்டால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம். கதையை கேட்ட ஐந்தாவது நிமிடத்தில் ஜெய் பீம் படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் ஒப்புக்கொண்ட சூர்யாவுக்கு நன்றி. இது ஒரு கூட்டு முயற்சி. களத்தில் இருந்து கலையை நோக்கி நகர்ந்திருக்கிறது அவ்வளவுதான். இந்த கூட்டு முயற்சியின் கன்னியாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.