இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழங்குடி மக்களின் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கும் வக்கீலாக நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிய ஜெய் பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் தங்கர்பச்சன் ஜெய் பீம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "ஜெய் பீம் திரைப்படம் மூடிக்கிடந்த மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது. எத்தனை பேர் சட்டம் படித்தாலும் அண்ணன் சந்துரு போல ஒரு சிலர் மட்டும் தான் ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்கள் வாழ்வதற்காக போராட்டம் நடத்துகின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார அழுத்தங்களால் ராசாக்கண்ணு போன்ற அப்பாவி மக்களின் வாழ்வு பறிபோவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும். நான் அன்று சொன்னதை சூர்யா இப்போது புரிந்திருப்பார் என நினைக்கிறேன். அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஜெய் பீம் படத்தை தலைநிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக் கொள்வார்கள்.பெரிய முதலீடு படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மனது வைத்தால் இந்த சமூகத்திற்கு தேவையான ஜெய் பீம் போன்ற சிறந்த படைப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இப்படத்தை சட்டம் காவல் துறையில் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். கலை மக்களுக்கானது அதை ஜெய் பீம் சாதித்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.