'உலகம் பிறந்தது எனக்காக...' என்று பாடி தன் காந்த குரலால் இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டி.எம். செளந்தர்ராஜன். இசை ரசிகர்களால் டி.எம்.ஸ் என்று அழைக்கப்படும் இவருக்கு இன்று 100-வது பிறந்த தினமாகும்.
1950 முதல் 1985வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள் இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் 10000க்கும் அதிகமான திரைப்பட பாடல்களும், 3000க்கும் மேலான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், டி.எம். செளந்தர்ராஜனின் 100-வது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூரும் விதமாக இயக்குநர் சீனுராமசாமி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்,
"தமிழை
அதன் ஆளுமையை
இனிமையை
இளமையை
தத்துவத்தை
ஞானத்தை
புரட்சியை
ராகத்தின் மகத்துவத்தோடு
மொழியின் ருசியை
நேரடியாக எங்கள் இதய
மூச்சாக பாடிய மக்கள் பாடகர்
டி.எம்.செளந்தரராஜன் அய்யாவின் நூறாவது பிறந்தநாளில் அவரின் பாதங்களை நன்றியோடு தொட்டு வணங்குகிறேன்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.