சாகித்ய அகாடெமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடெமி விருது, யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள், ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக பால புராஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும் ’திருக்கார்த்தியல்' என்ற சிறுகதை தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் ராம் தங்கமுக்கும் அறிவிக்கப்பட்டது.
இவ்விருது இலக்கியத் துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார்.
இந்நிலையில் ’திருக்கார்த்தியல்' சிறுகதை, தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளதாக எழுத்தாளர் ராம் தங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் என பல வெற்றி திரைப்படங்களின் இயக்குநரான சசி, கடந்த ஆண்டு திருக்கார்த்தியல் புத்தகத்தினை வாசித்து விட்டு நேரில் அழைத்து பாராட்டினார். தற்போது சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்ததுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படமாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு என் பேரன்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.