இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் கதிரவன் 'மீண்டும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சரவணன் சுப்பையா அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிட்டிசன் படத்தையும், ஷியாம் நடிப்பில் வெளியான ஏபிசிடி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதிரவன் நடிக்கும் 'மீண்டும்' படத்தை இயக்கியுள்ளார். இதில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலமுருகன் இசையமைக்க, ஹீரோ சினிமாஸ் சார்பில் சி மணிகண்டன் தயாரிக்கிறார். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலை இப்படத்தில் பேசியுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, எஸ்.ஏ சந்திரசேகர், ரங்கராஜ் பாண்டே, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்," மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா இல்ல சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய 'சிட்டிசன்' படம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்குக்காக எடுக்கிறோம். அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். 'சிட்டிசன்' படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம். ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா 'மீண்டும்' படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார்.
'சிட்டிசன்' இயக்குநராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும். படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைப்படுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. படத்தின் கதாநாயகன் கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா கைவிடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலி போல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒரு விதத்தில் நம்மை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்தில் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது" எனக் கூறியுள்ளார்.