சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்யவிடாமல் சிலர் தடுத்தனர். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர், சம்பவ இடத்திற்குப் போலீஸ் வரச்செய்து, அவர்களின் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![perarasu](http://image.nakkheeran.in/cdn/farfuture/T72yD0jk9k9ukbL4m2RlxZLF9oJf2ZqEq88IpaHl4dw/1587617060/sites/default/files/inline-images/perarasu_1.jpg)
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை தங்களின் கண்டனத்தைப் பதிவிட்டனர்.
இந்நிலையில் மருத்துவர் சைமன் உடலைப் புதைக்கவிடாமல் தடுத்து பிரச்சனை செய்தவர்களைக் கண்டித்து இயக்குனர் பேரரசு மனித வைரஸ் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!
மனசாட்சியைப்
புதைத்துவிட்டு
மருத்துவரைப்
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!
நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!
கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!
இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்தத் தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!
இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கரோனா வந்து
சாவது மேல்!”
என்று கவிதை பாடியுள்ளார்.