‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து ‘தேவராட்டம்’ என்னும் படத்தை இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்க சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபெஃப்ஸி விஜயன் வில்லனாக நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரஸன்னா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் முத்தையா மீது சாதியை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார் என்ற விமர்சனம் பலர் முன் வைக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தேவராட்டம் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் இயக்குனர் முத்தையா.
“முதலில் தலைப்பு, இரண்டாவது போஸ்டர், மூன்றாவது ட்ரைலர், நான்காவது பாடல்கள் இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் படம் வணிகத்திற்கு சரியாக இருக்கிறது. அதன்பின்தான் திரையரங்குகளுக்கு செல்கிறது. இன்று நடிக்க பலர் வருகிறார்கள், இயக்குனராக வர பலர் வருகிறார்கள். ஆனால், படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் புதிதாக வருவதில்லை. ஒரு தயாரிப்பாளர் ஈஸியாக கிடைக்க வேண்டும் என்றால் பெரிய நடிகர் கிடைக்க வேண்டும். அப்படிதான் சினிமா சூழல் இருக்கிறது எப்போதுமே சினிமா அவ்வாறுதான் இருக்கிறது. இதனால்தான் சில சண்டை காட்சிகள், சில விஷயங்கள், சொல கமெர்ஷியல்கள் வைக்கின்றோம். மறுபடியும் இது ஒரு ஜாதி படம் கிடையாது. இது உணர்வுபூர்வமான குடும்ப பாங்கான படம். யாரோ ஒருவரை சுற்றிதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடும்பம் என்பது அப்படிதான் அதைதான் என்னுடைய படங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் நகரங்களில் படம் எடுத்தாலும் உறவை மையப்படுத்தியே பேசுவேன். இதனால்தான் ஒரு கன்னட படத்தை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், தயாரிப்பாளர்கள் என்னை கிராமத்து கதைகளையே எடுக்க சொல்கிறார்கள். முத்தையா என்றாலே ஜாதி என்கிறார்கள். ஆனால், முத்தையா என்றால் உறவு என்று வரவேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு படத்திலும் உறவுமுறையை மையப்படுத்திய கதை எடுக்கிறேன். ஏதோ ஒரு பின்புலத்தில் அது அமைந்துவிடுகிறது. இதில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சமாளித்துவிட முடியும். வேறு ஒருவர் பின்புலத்தில் வைத்து அது தவறாகிவிட்டால். அந்த பிரச்சனையால்தான் நான் இப்படி எடுக்கிறேன். தமிழர்கள் அனைவருமே வீரமானவர்கள்தான், பண்பானவர்கள்தான். வார்த்தைகள் வேண்டுமானால் மாறுமே தவிர, பாசம், நேசம் அனைத்து இடத்திலும் ஒன்றுதான்.” என்று கூறினார்.