மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று (14.07.2023) வெளியாகியுள்ளது.
படத்தை பார்க்க திரையரங்குக்கு தனது மனைவியுடன் சிவகார்த்திகேயன் வருகை தந்திருந்தார். மேலும் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர்களோடு படம் பார்த்த இயக்குநர் மடோன் அஷ்வின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக காமெடி காட்சிகளை மக்கள் ரசித்து பார்த்தார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அதை அமைத்தோம். வழக்கமாக ஒரு அரசியல் வில்லன். அவர் ஊழல் பண்ணுகிறார். அதனால் மக்கள் வாழும் ஹவுசிங் போர்டிங்கில் பிரச்சனை வருகிறது. அதைத்தான் குறிப்பிட்டோமே தவிர வேறு எதையும் குறிப்பிடவில்லை. மேலும் அரசியல் ரீதியாக இதைத்தான் காண்பித்துள்ளோம் என எதையும் திரிக்கவில்லை. அது எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். படமாக பார்க்கும்போது அது நல்ல கருத்தாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.
பொதுவாக எல்லா ஹவுசிங் போர்டுமே ஒரு கலர் பெயிண்ட் தான் இருக்கும். கே.பி பார்க்கிலும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது. அதை ஒரு குறிப்பாகத் தான் எடுத்துக்கிட்டோமே தவிர அதைத்தான் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் எடுக்கவில்லை. இப்படம் ஒரு ஃபேண்டஸி படம். இதை ஒரு அரசியல் படமாக மாற்றிவிடாதீர்கள்" என்றார்.