தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.வி.ஆனந்த், இன்று (30.04.2021) அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவமானது நிகழ்ந்துள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்குள் இயக்குநர் கே.வி.ஆனந்தின் மரணச் செய்தி பேரிடியாக இறங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. பத்திரிகையாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராக பரிணமித்துள்ள கே.வி.ஆனந்தின் பயணம் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கே.வி. ஆனந்த், தன் கல்லூரி படிப்பிற்கு பிறகு தமிழின் முன்னனி பத்திரிகை ஒன்றில் புகைப்படக் கலைஞராக பணிக்குச் சேர்கிறார். புகைப்படத்தின் மீது இருந்த ஆர்வம், மெல்ல ஒளிப்பதிவு பக்கம் திரும்ப, தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு குழுவில் இணைகிறார். ‘கோபுர வாசலிலே’, ‘மீரா’, ‘அமரன்’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட பல படங்களில் பி.சி.ஸ்ரீராமின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படமாகப் பார்க்கப்படும் ‘தேவர் மகன்’ படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது படக்குழுவில் ஒருவராக கே.வி.ஆனந்த் இருக்கும் புகைப்படம் அவரது மரணச் செய்தி வெளியானதுமுதல் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
1994ஆம் ஆண்டு 'தேன்மாவின் கொம்பத்து' என்ற மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பி.சி.ஸ்ரீராமை படக்குழு அணுகியது. அந்த நேரத்தில் பி.சி.ஸ்ரீராம் பல படங்களில் பிசியாக பணியாற்றி வந்ததால், அந்த வாய்ப்பை தன்னுடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் கே.வி.ஆனந்திற்கு பரிந்துரை செய்கிறார். 'தேன்மாவின் கொம்பத்து' படத்தின் ஒளிப்பதிவில் தன்னுடைய கைவண்ணத்தை கே.வி.ஆனந்த் வெளிப்படுத்த, தேசிய விருது தேடி வந்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். அவற்றுள் தமிழில், ‘காதல் தேசம்’, ‘நேருக்கு நேர்’, ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின், ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அதனைத் தொடர்ந்து இயக்கிய ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘காப்பான்’ என ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, எளிய மக்களுக்கும் புரியும்படி அதைப் படமாக்கி, அதில் வெற்றியும் கண்டார்.
அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை கே.வி.ஆனந்த் எழுதி வந்த நிலையில், இந்தத் திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.