Skip to main content

“இனி ஒருவர், இதுபோல உயிரிழக்கக்கூடாது”- இயக்குனர் சேரன் காட்டம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

cheran dir

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இந்தக் கொடூர சம்பவத்திற்கு இயக்குனர் சேரன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “காவல்துறை என்றாலே அடித்துச் சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டிப்புக் குரல் எழுப்ப வேண்டும். இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதைத் தாண்டி இனி ஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது.

 

அதன் உதாரணமாக இந்தப் புகாரை நீதிபதிகள் விசாரித்துக் கொடுக்கும் கடும் தண்டனை மூலமாக நீதியும் சட்டமும் காப்பாற்றப்படவேண்டும். காவல்துறை மக்களைப் பாதுகாக்க அன்றி உயிரைப் பறிக்க அல்ல என்பதை முதலில் இதுபோன்ற காவலர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் காவல்துறையை நம்ப மறுப்பார்கள்.

 

மனித உரிமைக் கழகமும் மக்களும் இந்த அவமானச் செயலுக்குத் தகுந்த பாடம் புகட்ட தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்த வேண்டும். நீதியின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தவறை நிரூபிக்கும் பட்சத்தில் அரசு அவர்களுக்கான கடுமையான தண்டனையை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என நம்பிக்கை தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்