பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஜோசப், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் விசித்திரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் பாலா, "மலையாளத்தில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ரீமேக் செய்யலாம் என்று நினைத்தபோது இந்தப் படத்தில் நான் நடிக்கட்டுமா என்று ஆர்.கே.சுரேஷ் விரும்பி கேட்டார். நானும் சரி என்று கூறிவிட்டு மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரையே தமிழிலும் இயக்க ஒப்பந்தம் செய்தோம். மலையாளத்தில்கூட பட்ஜெட் பிரச்சனை ஏதாவது உங்களுக்கு இருந்திருக்கலாம். இங்கு அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் நீங்கள் படம் எடுங்கள் என்றேன். அங்கு எதையெல்லாம் பண்ண முடியவில்லையோ அதையும் சேர்த்து பண்ணுங்கள் என்றேன். மலையாளத்தைவிட தமிழில் சிறப்பாக படம் வந்துள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையும் யுகபாரதியின் வரிகளும் படத்திற்கு பக்கபலமாக உள்ளன.
படம் எடுத்துவிட்டு இறுதியாக பார்க்கும்போது படம் நன்றாக வரவில்லை என்றால் என்னுடைய பெயரையும் என் கம்பெனி பெயரையும் போடாதீர்கள் என்று கூறிவிடுவேன். ஆனால், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பெயர் போடுங்கள் என்று நானே கூறினேன். ஆர்.கே.சுரேஷ் உருப்படியாக ஒரு படம் பண்ணிவிட்டார். ஏதாவது கோமாளித்தனம் செய்கிற மாதிரி அடுத்தடுத்து படங்கள் பண்ணாமல் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படம் மூலம் அவருக்கு மரியாதை கிடைக்கும். அந்த மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவருக்கு இருக்கும் சவாலான விஷயம்" எனப் பேசினார்.