இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். மேலும் வன்னியர் சமூகத்தினரைத் தவறாகச் சித்தரித்ததற்காக சூர்யா உள்ளிட்ட ஜெய் பீம் படக்குழுவினருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இயக்குநரும், நடிகருமான அமீர் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," சமூகநீதியை நிலைநாட்ட வற்புறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான் எனக் குறிப்பிட்டுள்ளார்.