இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர்.சமீபத்தில் 'ஜெய் பீம்' படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும் 'ஜெய்பீம்' திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் 'ப்ரேமம்' படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜெய் பீம் படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ஜெய் பீம்' படம் பார்த்தேன். மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தை துணிச்சலுடன் தயாரித்ததற்காக சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேமை நினைத்து பெருமை கொள்கிறேன். "இத்திரைப்பட குழுவினருக்கு அனைவருக்கும் எனது மரியாதையும் அன்பும்" எனக் குறிப்பிட்டுள்ளார்