கௌஸ்துப் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாரி கே விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா. ஃபேண்டஸி காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
திண்டுக்கல் ஐ. லியோனி பேசியதாவது, “முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத்தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான். அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடிக்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர்” என்றார்.
நடிகர் வைபவ் பேசியதாவது, “எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்துவிட்டார். இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப் படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்” என்றார்.