தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பல வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். நடிப்பை தாண்டி பாடல், எழுத்து, இயக்கம் என பன்முக திறமை கொண்ட இவர் வொண்டர் பார் பிலிம்ஸ் என்ற பெயரில் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் கடந்த 2013 ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தினை முதன் முதலில் தனுஷ் தயாரித்திருந்தார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி', 'விசாரணை', 'காலா', 'வடசென்னை' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். மேலும் இதே பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனல் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் பல சாதனைகளை படைத்த "ரௌடி பேபி...", "டாணு டாணு..." உள்ளிட்ட ஹிட் பாடல்களும் அடங்கும். இதே போன்று பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.