துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டி40 என்று இரு படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ். தாணு தயாரிக்கிறார். கடந்த ஜனவரி 3ஆம் தேதி திருநெல்வேலியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
\
இதில் தனுஷ் ஜோடியாக மலையாள ஜூன் பட நடிகை ராஜிஷா விஜயன் நடிக்கிறார். மலையாள நடிகர் லால், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
இதை தொடர்ந்து இந்த தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூக நலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தங்கள் தயாரிப்பில் கர்ணன் என்ற பெயரில் திரைப்படம் உருவாகுவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் ‘கர்ணன்’ திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் என்னும் படத்திற்கு முதலில் திருவிளையாடல் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. அப்போதும் சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை வைத்ததால் ஆரம்பம் என்று அந்த பெயருடன் சேர்த்துக்கொண்டனர். விக்ரமின் தெய்வத்திருமகள் படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று சிவாஜி பட பெயர் வைக்கப்பட்டது. அப்போதும் சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையால் அந்த பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1964ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான மகாபாரத கதையை மையமாக கொண்ட படம் கர்ணன். இதை பி.ஆர். பந்தலு இயக்கியிருந்தார்.