
சபரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்துள்ள படம் ‘ஈ.எம்.ஐ.’(EMI)- மாதத் தவணை”. இப்படம் காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் பாக்கியராஜ், தேவையானி போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேவயானி பேசுகையில், “ஈ.எம்.ஐ. டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. ஈ.எம்.ஐ. வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லோரும் ஈ.எம்.ஐ. வாங்குகிறோம். அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநரே நடித்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தின் நடித்த ஆதவனுக்கு வாழ்த்துக்கள்” என்றார். மேலும் மேடையில் அமர்ந்திருந்த ஆதவனை பார்த்து, “வருஷத்தில் இரண்டு மூணு படமாவது நடிங்க. அஜித் மாதிரி இருக்காதீங்க” என்று நகைச்சுவையாக அறிவுரை கூறினார்.
தொடர்ந்து அவர் இயக்கி 7வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘கைக்குட்டை ராணி’ குறும்படம் குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையில் எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும், புதிதாக முயற்சி செய்ய வேண்டும், அந்த வகையில் தான் இயக்கம் படித்து குறும்படம் எடுத்தேன். அதன் திரையிடல் இங்கு தான் நடந்தது. விரைவில் அது வெளியாகும்” என்றார்.