திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுடன் நடிகர் அஜித்தும் நேற்று முன்தினம் (27.7.2022) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தை பார்க்க ரைபிள் கிளப் வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களை பார்க்க ரைபிள் கிளப் மடியில் ஏறிய அஜித் அவர்களுக்கு கையசைத்து முத்தமிட்டார். மேலும் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த போலீசார் இறுதியில் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.
இந்நிலையில் ரைபிள் கிளப்பில் நடந்த நிகழ்வு குறித்து காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீ தேவி பேசியுள்ளார். அதில், "ரசிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன் எனக் கூறி, அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில் அனைத்து காவலரிடமும் நன்றி தெரிவித்தார். உண்மையிலேயே அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்" எனத் தெரிவித்துள்ளார்.