இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப் பிரவேசம்’படத்தின் மூலம் அறிமுகமானவர் டெல்லி கணேஷ். டெல்லியில் உள்ள நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக பணியாற்றிய இவரை கே.பாலச்சந்தர், கணேஷ் என்ற அவரது பெயரை டெல்லி கணேஷ் என அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்கள் வரை பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைத்துறையைத் தாண்டி இந்திய விமானப்படையிலும் 1964 முதல் 1974 வரை பணியாற்றியிருக்கிறார்.
80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக அதிகமாகப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தாலும் கடந்த வருடம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம்(09.10.2024) அவர் மரணமடைந்துள்ளார். அன்று இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது உறக்கத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அப்போது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள் ராதா ரவி, சிவக்குமார், மன்சூர் அலிகான், ஒய் ஜி மகேந்திரன், வெற்றிமாறன், பார்த்திபன், மணிகண்டன், சத்யராஜ், சார்லி, தேவையாணி, தலைவாசல் விஜய், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் செய்தியாளர்களை சந்தித்து டெல்லி கணேஷுடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பின்பு அவரது உடலுக்குத் தேசியக் கொடி போர்த்தி விமானப்படையினர் மரியாதை செய்தனர். விமானப்படையில் அவர் 10 வருடம் பணியாற்றியதைத் தொடர்ந்து அதை கௌரவிக்கும் விதமாக மரியாதை செய்துள்ளனர்.