புயலால் முறிந்த மரங்களுக்கு மத்தியில் ஃபோட்டோ ஷூட் நடத்திய பிரபல தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங்கின் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், இப்புயலானது கடந்த 17ஆம் தேதியன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும்போது மும்பையில் மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் பல மரங்கள் முறிந்து விழுந்தன. இப்புயலால் பத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு மத்தியில் நடனமாடி வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை தீபிகா சிங் வெளியிட்டார். மேலும், அந்த மரங்களுக்கு இடையே ஃபோட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களையும் பதிவிட்டார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவிற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. புயல் காரணமாக உயிர் சேதங்களும் பொருட்சேதங்களும் கடுமையாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இதுபோன்ற ஃபோட்டோ ஷூட் தேவையா என நடிகை தீபிகா சிங்கை சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.