'தென்மேற்குப் பருவக்காற்று', 'பரதேசி' உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளரான செழியன், இயக்கியுள்ள திரைப்படம் 'டுலெட்'. சினிமாவை கவனிப்பவர்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தப் பெயர் பரிச்சயம். படம் உருவான நாளிலிருந்தே சர்வதேச அளவிலான பல திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்று உலக அளவில் பல முக்கிய படைப்பாளிகளின் பாராட்டை பெற்றது. இந்த பாராட்டுகளுடனும் விருதுகளுடனும் தற்போது தமிழகத்தில் வெளியிடப்படுகிறது 'டுலெட்'.
நாளை (21-02-2019) வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் கடந்த சில நாட்களாக சென்னையில் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளை பார்த்த திரைத்துறையினரும் பத்திரிகையாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் வழக்கமான சம்பிரதாயத்துக்காகப் பாராட்டுவது போல் அல்லாமல், 'இந்தத் திரைப்படம் ஒரு விருது படம் போலல்லாது, சுவாரசியமாக, ஒரு வித பதற்றத்தை உருவாக்கும் திரைக்கதையோடு இருக்கின்றது. அதே நேரம் நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்த அனுபவங்களை உண்மையாகச் சொல்கிறது. இந்தப் படத்தில் உள்ள ஏதேனும் ஒரு பாத்திரத்துடன் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம்' என்கிறார்கள்.
பொதுவாக இது போன்ற விருது பெற்ற திரைப்படங்கள் வெளிவரும்போது திரையரங்குகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். ஆனால், 'டுலெட்' படத்துக்குக் கிடைத்துவரும் பாசிட்டிவ் பேச்சுகளால் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவருகிறது. நாளை வெளிவரும் இந்தப் படத்துக்கு சென்னை அரங்குகளில் முன்பதிவும் சிறப்பாக இருக்கிறது. 'காக்கா முட்டை', 'அருவி', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற படங்கள் விருதுகளைக் குவித்த பின் திரைக்கு வந்து அங்கும் வெற்றி பெற்றவை. இந்த வரிசையில் 'டுலெட்' ஒரு சிறப்பான இடத்தைப் பெறும் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.