இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இருப்பினும் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் மீது 295(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.