கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா, அம்மாவட்டத்தின் தனியார் பேருந்தின் முதல் பெண் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றார். அண்மையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். மேலும் ஷர்மிளாவிற்கு கைக் கடிகாரத்தைப் பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கனிமொழி வருகைக்குப் பின், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கும் பெண் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அவரது பணியை ஷர்மிளா விட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாகப் பேருந்து உரிமையாளர் தரப்பு வைத்த குற்றச்சாட்டால் அவரது பணி பறிபோனது என்ற தகவலும் வெளியானது. பின்பு இதனை அறிந்த கனிமொழி, ஷர்மிளா வேலை இழந்தது குறித்து விசாரித்து அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவது குறித்து உறுதியளித்தார். அதன்படி அவருக்கு உக்கடம்-போகம்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து நிறுவனமான கிருஷ்ணா நிறுவனம் ஓட்டுநர் பணி அளித்துள்ளது.
இது அங்கு பரபரப்பை கிளப்ப, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து கார் ஒன்றை பரிசளிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து இன்று கார் சாவியை வழங்கியுள்ளார். அதைப் பெற்ற ஷர்மிளா பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "கமல் சார் கையில் சாவி வாங்க ஆசைப்பட்டேன். அது நடந்துவிட்டது. சாவி கொடுத்துவிட்டு சில அறிவுரை வழங்கினார். கார் நாளைக்கு டெலிவரி எடுக்க போறோம். தொழில் முனைவோராக வர வேண்டும் என்றுதான் கமல் சார் எனக்கு கொடுத்தார். ‘உன்னை நான் கைத்தூக்கி விடுகிறேன்; நீ உன்னை போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
நிறைய பேர் நிறைய சொல்றாங்க. எல்லாமே நெகட்டிவா தான் இருக்கு. பாசிட்டிவா எதுவுமே இல்லை. ஆனா எனக்கு ஒரு சில பாசிட்டிவான மக்கள் இருக்குறாங்க. அன்றைக்கு, உங்க புள்ளைய கூப்பிட்டு வெளியே போ... என்று ஓனர் சொன்னார். எங்க அப்பாவை அவமரியாதையா பேசினது எனக்கு சங்கடமா இருந்துச்சி. அதனால் வெளியே வந்துட்டேன்" என்றார்.