தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், கதையாசிரியர், நடனக்கலைஞர், பாடகர் என கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கமல்ஹாசன். தனது சிறு வயதிலேயே திரைப்பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பெருமையையும் தக்கவைத்து வருகிறார். இந்திய அரசியின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். மேலும், திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு அந்நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர் விருது' வழங்கி கௌரவித்திருந்தது.
திரைத்துறையில் இன்றும் அதே துள்ளலுடனும் இளமையுடனும் தன் பங்களிப்பை செலுத்தி வரும் கமல் இன்று (07.11.2022) தனது 68வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ஒரு இணையற்றக் கலைஞனாக, நீங்கள் தொடர்ந்து எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விஷயங்களில் நீங்கள் பயணித்து வருவது எங்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் .