Skip to main content

"ஈடு செய்ய இயலாத இழப்பு" - வடிவேலு தாயார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

cm mk stalin condolences message to vadivelu mother passed away

 

90களில் தொடங்கி தற்போதுவரை தனக்கே உரித்தான உடல்மொழியைக் கொண்டு தனது நகைச்சுவையாலும் நடிப்பாலும் தமிழ்த் திரைத்துறையில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்தே விலகியிருந்த வடிவேலு தற்போது மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைத் தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் எனப் பல்வேறு படங்கள் வடிவேலு நடிப்பில் உருவாகி வருகின்றன. 

 

இந்நிலையில், வடிவேலுவின் சொந்த ஊரான மதுரை விரகனூரில் வசித்து வந்த அவரது தாயார் சரோஜினி நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவு வடிவேலு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

வடிவேலு தாயாரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்