தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர் ஆரூர்தாஸ். திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் வசனம் எழுதிய பாசமலர், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கியதற்காக 2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஆரூர்தாஸ்க்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு விருதினை வழங்கினார்.
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (92) சென்னையில் காலமானதைத் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூர்தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் 'பாசமலர்' திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம்பெற்றிருப்பவர். அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களைப் பார்த்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்., கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.