கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'டாணாக்காரன்'. காவல் துறையில் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை பேசும் படமாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த 'போஸ் வெங்கட்' அவர்களை நக்கீரன் ஸ்டுடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...
அரசியல் ஆசை திடீர்னு வந்தது இல்லை. எங்க அப்பா திமுக-வில் இருந்தவர். எங்க வீட்டில் நிறைய கலைஞர் புகைப்படங்கள் இருக்கும். நான் லோடு மேனாக வேலை செய்த போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தை கடந்து தான் செல்வேன். அப்போது தளபதி அவர்களின் வீடு கலைஞர் வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும். தளபதி அவர்கள் தோட்டத்தில் உள்ள பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருப்பார். 'அண்ணே-னு கூப்பிடுவேன் வா தம்பி நல்லாருக்கியா பா' என்று கேட்பார். அதெல்லாம் எனக்கு கனவு மாறி தெரிகிறது.
எங்க அப்பா தலைவரை பார்க்க அவர் வீட்டு வாசலில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்தார். ஆனால் தலைவர் வெளியூர் சென்றிருந்தார். அந்த அளவிற்கு திமுக மீது ஈடுபாடுடன் இருந்தது எங்கள் குடும்பம். அந்த நேரத்தில் கண்ணம்மா திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். எங்க அப்பா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். தலைவர் என்னை அழைத்து தோளில் கை போட்டார். எங்க அப்பா அழ ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு கலைமாமணி விருது தலைவர் கையில் வாங்கினேன். அதை எங்க அப்பா கழுத்தில் மாட்டினேன். எங்க அப்பாவின் கனவை நான் நினைவாக்கினேன். ஆனால் என் அப்பாவிற்கு ஆசை இருக்கும்ல , நாம எந்த தலைவரை தெய்வமா பார்த்தோமோ அங்கேயே என் பையன் ஹீரோவா நடிச்சிட்டான். அந்த கட்சியிலே பயணிக்கிறான்' என்று சந்தோஷ பட்டார். என் அப்பா இறந்த பிறகு முடிவு செய்தேன். 'அவருடைய நிராசை என்னவாக இருந்திருக்கும் இந்த ஊரில் நம்ம ஒரு அரசியல்வாதியா தோத்து போய்ட்டோம்' அதனால், சரி நம்ம ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்க்கையில் பயணிப்போம் என்று முடிவு செய்து அதனை தொடர்கிறேன்.
திமுக வரலாறு என்பது இனிமே புதுசா வரவங்க, திடீர் அரசியல்வாதிகள் அவங்க எல்லாம் படிக்கணும். ஆனால் எனக்கு எங்க அப்பா ஆறு வயதில் இருந்தே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். எங்க மீட்டிங் போனாலும் அதை சொல்லுவார். கலைஞர் எப்படி பேசினார் என்பதை பேசி காட்டுவார். அப்போதே வீட்டுக்குள் திமுக பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும், ஆட்டோவில் நோட்டீஸ் போடுவோம். அரசியலில் பயணிப்பது என்பது திடீர்னு வந்ததில்லை. அப்போதிலிருந்து இருக்கிறது. அதனால் தான் தளபதி அவர்கள் 2016-ல் அவருடன் இருந்த போதே திடீர்னு ஒரு அறிவிப்பை அறிவித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தில் இனி நடிகர்களுக்கு வேலை இல்லை, பிரச்சாரங்களுக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்தார். அடுத்த நாளில் முரசொலி பத்திரிக்கையில் போஸ் வெங்கட் பிரச்சார பயணம் என்று எழுதி இருந்தார்கள். இதனால் முதல்வர் அவர்கள் என்னை நடிகனாக பார்க்கவில்லை அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறார். அதனால் ஆரம்பத்தில் இருந்தே நான் திமுக-காரன் தான் என கூறினார்.