2000 ஆம் ஆண்டில் தொடங்கி பல ஆண்டுகள் தன் சிரிப்பாலே தமிழகத்தை கவர்ந்தவர் புன்னகை இளவரசி சினேகா. அவர் முன்னொரு காலத்தில் தன்னை பற்றி கொடுத்த ஒரு பேட்டியில் கூறியது...
எங்க குடும்பம் சினிமா சம்பந்தம் கொஞ்சமும் இல்லாதது. சினிமா பார்த்து ஒரு ரசிகைக்குரிய ரசனையோடு அவங்க நல்லா நடிச்சிருக்காங்க. இவங்களும் கொஞ்சம் பரவாயில்லை. இப்படி சினிமாவைக் குறித்தும் அதில் பங்காற்றியவர்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்த பேமிலியிலிருந்து சினிமா நடிகையாக நான் வந்திருக்கின்றேன்.
நான் பிறந்தது பம்பாயில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் எண்ணெய் வளம் மிக்க துபாய் நாட்டில்தான். அங்கேயும் எனது பழக்க, வழக்கம் எல்லாம் ஒரு தமிழ் குடும்பம் மாதிரிதான் இருக்கும். அப்போது நான் மினி ஸ்கர்ட் கூட போட்டதில்லை.
நடிக்க வந்தது ஒரு கனவு மாதிரி நிகழ்ந்துவிட்டது. மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். என்னைப் புடிச்சு நடிகையாப் போட்டுட்டாங்க. நான் நடிச்ச முதல் மலையாளப் படம் நல்லா போகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் நடித்ததால் எனக்குள் இருந்த கேமிரா பயம் போயே போயிடுச்சு.
மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் சுசிகணேசன் இயக்கத்தில் "விரும்புகிறேன்' படத்தில் நடிக்கும்போதுதான் நான் சிரிக்கவும் அழவும் கத்துக்கிட்டேன். அந்தப் படம் எனக்கு ஒரு பயிற்சிக்கழமாக அமைந்தது.
அந்தப் படத்தின் நடனக்காட்சியில் சுழன்று சுழன்று ஆடும்போது டமால் என்று கால் வழுக்கி விழுந்துவிட்டேன். பக்கத்தில் இருக்கிறவர்களை இடித்துக்கொள்ளாமல் ஆடணும் என்று பிரசாந்த் சொன்னார். இப்படிக்கூட நடித்த எல்லோரும் எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. அதனாலே எல்லோருக்கும் என் மீது ஒரு ஈரமான பார்வை படர்ந்தது. எனக்குள் சொல்லிக் கிட்டேன். இன்னும் முயற்சி செய்யணும். ஏதாவது ஒரு வழியில் சாதிக்கணும், சினேகான்னு யார்னு ஒரு பத்து பேருக்குத் தெரியணும்னு ஆசை இருந்தது.
ஏதாவது ஒரு துறையில் நான் நல்ல பேர் எடுக்கணும்னு ஆசைப்பட்டதைவிட சினிமா அதிகமான புகழும், பேரும் கொடுத்திருக்கு. ஆனாலும் கோடிகள் குவிந்தாலும் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்னு சொல்லிதான் சினிமாவுக்கு வந்தேன். முடிந்த வரை அதிலிருந்து நழுவவில்லை.
என்கிட்டே எனக்குப் பிடிச்சதும் மத்தவங்களுக்கு என்கிட்டே பிடிச்சதும் என்னோட சிரிப்புதான். நான் பிறக்கும் போதே என்னோட பேரன்ஸ் நீ என்னைக்கும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டேனா என்னன்னு தெரியலே... எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.
உனக்கு வாய் வலிக்காதா... எப்பப்பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்னு என் ஃப்ரண்ட்ஸ் கூட கேட்பாங்க. ஸ்கூலில்கூட டாம் அண்டு ஜெர்ரின்னு கூப்பிடுவாங்க அங்கேயும் இங்கேயும் பறந்திட்டிருப்பேன்.
சிரிக்கிறது எனக்கு ரொம்ப பிடித்த வேலை. சிரித்தால் கவலை, வலி, நோய் எல்லாம் போயிடும் என்பார்கள். சிரிப்பு ஆண்டவன் கொடுத்த ஆரோக்கிய வரம். எனக்குச் சிரிப்பு ஒரு டானிக் மாதிரி.
பல பேர் அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் உணராமல் ஆண்டவன் கொடுத்திருக்கிற அந்த வரத்தைப் பயன்படுத்தாமல் உம்முனு இருப்பாங்க. அந்த மாதிரி உம்மன்னா மூஞ்சிகளை பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கும்.
சினிமா மிக அற்புதமான மீடியா. இதில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. எல்லோராலும் கவனிக்கப்படும் மீடியாவாக இருப்பதால் இங்கிருப்பவர்களின் சின்ன சின்ன செயல்களும் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
என்னைப் பற்றியும் கிசுகிசு வந்ததைப் படிச்சுட்டு அழுதிருக்கிறேன். ஏண்டா நடிக்க வந்தோம்னு கூட தோணிச்சு. அந்த வலியும், வேதனையும் கொஞ்சம் இருந்துச்சு. இப்ப கிசுகிசுகளைக் கண்டுக்கறதில்லை. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயப்படணும்.
பட்டாம்பூச்சி மாதிரி பறந்துக்கிட்டிருந்தேன். என்ன பீச்சுல போய் மொளகா பஜ்ஜி சாப்பிட முடியாது. சின்ன பொண்ணு மாதிரி அலையைத் துரத்தி ஓட முடியாது. சினிமாவினால் இழந்தது பிரைவசி மட்டும்தான். மற்றபடி சினிமா எனக்கு நிறைய சந்தோஷங்களைக் கொடுத்திருக்கு. வாழ்க்கையே ஒரு பள்ளிக்கூடம்தானே.