உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதனையொட்டி பிரபல பாடகி சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தொடக்க விழாவின் போது நண்பகல் 12.20 மணிக்கு ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்றும் வீட்டில் ஐந்து அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ அது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சித்ராவின் இந்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட கேரளாவைச் சேர்ந்த பாடகர் சூரஜ் சந்தோஷ், “இன்னும் எத்தனைச் சிலைகள் உடைக்கப்படும். சித்ரா போன்ற எத்தனை உண்மை முகங்கள் வெளிவரும்” என கூறியுள்ளார். இதனிடையே சித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்ட பாடகர் ஜி.வேணுகோபால், “சித்ராவுக்கு எதிரான கருத்துகள் தன்னை காயப்படுத்தியதாகவும் கருத்து வேறுபாடு இருந்தால் அவரை மன்னிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து குஷ்பூ, “கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது” என குறிப்பிட்டு சித்ரா பக்கம் தான் நிற்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே போல் பலரும் சித்ராவின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.